
ஒரிசா மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் தலைமையில் அமைந்துள்ள மந்திரி சபையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை கேபினட் மந்திரியாக பதவி வகிப்பவர் ரமேஷ் சந்திரமாஜி.மாஜி முக்கியமான துறைகளை கவனிக்கும் மந்திரியாக இருந்தாலும் பிளஸ்-2 கூட முடிக்காதது அவருக்கு பெரும் மனக்குறையாக இருந்து வந்தது.
எனவே அமைச்சர் பணிக்கு இடையிலும் பிளஸ்-2 தேர்வுக்கு படித்து வந்தார். நவ்ரங்பூர் மாவட்டம் பன பேடா மகாவித்யாலயாவில் சமீபத்தில் மந்திரி மாஜி பிளஸ்-2 தேர்வு எழுதினர். அந்த பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினரான அவருக்கு தனி அறையில் பரீட்சை எழுத ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில் முதல் “அட்டம்ட்”டிலேயே மந்திரி மாஜி 600க்கு 376 மார்க் வாங்கி வெற்றி பெற்றார். தேர்வில் வெற்றி பெற்றதும் மாணவர்கள் துள்ளிக் குதிப்பது போல, பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற விவரம் தெரிந்ததும் மந்திரி மாஜியும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அமைச்சர் பணியின் நெருக்கடிக்கு இடையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தொடர்ந்து படிக்க நான் திட்டமிட்டு இருக்கிறேன். அமைச்சராக பணிகள் இருந்தாலும் படிப்பு மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக