
பெரும் செல்வந்தர் விஜயகுமார் பட்டனத்தில் இருக்கும் தன் பேரன் சாந்தனுவை கிராமத்துக்கு வரவழைத்து திடும் என ஒரு பெண்ணை பார்த்து திருமண எற்பாடு செய்கிறார்.
அதில் இருந்து தப்பிக்க சென்னையில் ஒரு பெண்ணை காதலிப்பதாக சாந்தனு பொய் சொல்கிறார். அப்பெண்ணை ஒரு மாதத்துக்குள் அழைத்து வரவேண்டும் என தாத்தா கெடு விதிக்கிறார்.
சாந்தனு தனக்கேற்ற பெண்ணை தேடி அலைகிறார். அப்போது பார்வையற்றோர் மீது பரிவு காட்டும் ரேஷ்மியை சந்தித்து காதல் வயப்படுகிறார். அவரிடம் பார்வையற்றவர் போல் நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.
காதலை ரேஷ்மி தந்தை ஆஷிஷ் வித்யார்த்தி எதிர்க்கிறார். இதனால் வீட்டை விட்டு ஒடி ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கின்றனர், அப்போது சாந்தனு பார்வையுடயவர் என்று தெரிய வருகிறது.
இதனால் அவர் மேல் வெறுப்பாகி திருமணத்தை நிறுத்துகிறார். ஆனாலும் விடாமல் ரேஷ்மியை தொடர்கிறார் சாந்தனு. ஒரு கட்டத்தில் ரேஷ்மி மனம் மாறி சாந்தனுவை ஏற்கிறார். அப்போது எதிர்பாராத அதிர்ச்சியில் காதல் நிலை குலைகிறது.
அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது கிளைமாக்ஸ்...
சாந்தனு காதலும் காமெடியுமாய் மனதில் பதிகிறார். தாத்தாவிடம் பொய் சொல்லி திருமணத்தை நிறுத்துவது... ரேஷ்மியிடம் பார்வையற்றவராக நடித்து அவர் கையை பிடித்து நடந்து வசியப்படுத்துவது கலகலப்பானவை.
சந்தானத்துடன் ஜோடி போட்டு செய்யும் குறும்புகள் வயிற்றை புண்ணாக்குகின்றன. நிஜமாகவே பார்வை போன பிறகும் சீரியஸ் இல்லாமல் காமெடி செய்வது பொருந்தவில்லை.
ரேஷ்மி பிறருக்கு உதவும் கேரக்டரில் அழுத்தம் பதிக்கிறார். சாந்தனுவால் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் ஒவ்வொரு நிமிடமும் அவனை நான் காதலிச்சேன். ஆனா ஒவ்வொரு நிமிடமும் அவன் என்னை ஏமாற்றியிருக்கான் என்று தந்தையிடம் கதறி அழும் போது மனதை உடைய வைக்கிறார்.
கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆஷிஷ் வித்யார்த்தி கவர்கிறார். விஜயகுமாரின் நாட்டாமை கம்பீரம் ரகளை. காதலும் கலகலப்புமாய் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஏ.சி. முகில். விஜய் எபினேசர் இசை, பிரசாத் டி.மிஷால் ஒளிப்பதிவு பலம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக