
செங்கல் சூளை தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க தன்னையே தியாகம் செய்யும் ஒரு ஆசிரியர் கதை. பத்திர எழுத்தர் வேலை பார்ப்பவர் பாக்யராஜ். தனது மகன் விமலை அரசாங்க வாத்தியாராக்கி விட முயற்சிக்கிறார். கிராம சேவா அமைப்பு மூலம் கண்டெடுத்தான் காடு என்ற பொட்டல் பகுதிக்கு ஆசிரியர் வேலைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு சில காலம் வேலை பார்த்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற உறுதி அளிக்கப்படுகிறது.
கண்டெடுத்தான் காடு செங்கல் சூளை தொழிலாளர்கள் விமலை கேலி செய்கின்றனர். குழந்தைகள் அவரிடம் கல்வி கற்க மறுத்து பயந்து ஓடுகிறார்கள். அங்கு டீ கடை நடத்தும் இனியா பழக்கமாகி விமலுக்கு பொங்கி போடுகிறார். ஒரு கட்டத்தில் படிப்பறிவில்லாததால் செங்கல் சூளை முதலாளி பொன்வண்ணனிடம் தொழிலாளர் ஏமாறுவதை புரிய வைக்கிறார். இதையடுத்து குழந்தைகளை அவரிடம் படிக்க அனுப்புகின்றனர். வில்லன் கோஷ்டி விமலை ஊரை விட்டு துரத்த முயற்சிக்கிறது. அப்போது விமல் எதிர்பார்த்த அரசு வேலைக்கு ஆர்டரும் வருகிறது. விமல் என்ன முடிவு எடுத்தார் என்பது உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்.
1966ல் நடக்கும் கதை என்ற டைட்டிலுடன் படம் துவங்குகிறது. மரங்களின்றி பாலைவனம் போல் பறந்து கிடக்கும் பகுதியில் சில குடிசை வீடுகள், ஒரு டீக் கடை, கிணறு, செங்கல் சூளை அங்குள்ள அழுக்கு மனிதர்கள் என வித்தியாசமான களத்தில் காட்சிகளை உயிரோட்டமாக காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.சற்குணம். தொள தொள பேண்ட் சட்டை மடித்து வாரிய தலையில் ஐம்பது வருடத்துக்கு முந்தைய இளைஞராக அப்படியே வாழ்கிறார் விமல்... குழந்தைகளை படிக்க அனுப்பும் படி பெற்றோரிடம் கெஞ்சுவது. சிறுவர்களிடம் ஏமாந்து படும் அவஸ்தைகள் ரகளை. தம்பிராமைய்யா போடும் கணக்குக்கு பதில் தெரியாமல் விழிப்பது... தாமாஷ்... இனியாவுக்கும் விமலுக்குமான மோதலும், காதலும் கவித்துவம் அவர் களுக்குள் வரும் அக்கால ரேடியோ பெட்டி கேரக்டர் ஜீவன். குழந்தைகள் மனதில் கல்வியை விதைச்சிட்டோம் என்னை விட்டால் அவர்களுக்கு யாரு இருக்கா என கிளைமாக்சில் கலங்கி நிற்கும் போது விழிகளில் நீர் முட்ட வைக்கிறார்.
இனியா பொட்டல் காட்டு தேவதையாய் மனதில் பரவுகிறார். ஒவ்வொரு உணர்ச்சிகளையும் விழிகளிலும் முகத்திலும் பக்குவாய் வெளிப்படுத்தி தேர்ந்த நடிகையாய் பளிச்சிடுகிறார். விமலிடம் காதல் வயப்படுவது... அவர் பிரிந்து சென்றதும் விமல் வசித்த குடிசையிலேயே நின்ற கோலத்தில் தலை கவிழ்ந்து விடியும் வரை தூங்கி கிடப்பது ஈர்க்கிறது. விதைக்கல அறுக்கிற என தத்துவம் பேசும் மனநோயளி குமரவேல் கணக்கு போட்டு இம்சை செய்யும் தம்பி ராமையா முதலாளி பொன்வன்னன் மற்றும் தொழிலாளர்கள், சிறுவர்கள் என அனைத்து கேரக்டர்களும் நேர்த்தி. முதல் பாதி கதை புழுதி காட்சியில் வறட்சியாக நகர்வது சலிப்பு. பிற்பகுதி கதை உயிரும் உணர்வும் கலந்த வாழ்வியலை வாரி இறைக்கிறது.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக