நாங்கள் பார்த்த துறைமுகத்தில்
தரையோடு பிணைக்கப்பட்டு கப்பல்
தண்ணீரில் தளும்பிக்கொண்டிருக்க
சுருட்டி மேலிழுத்து வைக்கப்பட்ட
சேறு உலர்ந்த நங்கூரத்தில்
அமர்ந்துகொண்டிருந்தது ஒரு பறவை.
நங்கூரம் மண்ணுக்கானது
கப்பல் நீருக்கானது
சிறகுகள் வானிற்கானது
என்பது
அவன் (மட்டும்) பார்த்தது.
நீ-யும்
கேரம் போர்டில்
இப்போது உன்முறை
நீ
வெற்றிகளை அடுக்கவில்லை
வெற்றியை நோக்கி முன் நகரவில்லை
எதிராளியின் வெற்றிக்கு தடைபோடவில்லை
துணை போகவில்லை
ஒருமுறை சுண்டிவிட்டாய்
எதிலும் தொட்டுக்கொள்ளாமல்
சென்றுவந்தது
இம்முறை
விளையாடிவிட்டாய்
நீயும்
செல்பேசி நாகரிகம்
குகைபோன்றதோர்
அடுக்ககக் குடியிருப்பு வீட்டிற்குள்ளிருக்கும்போது
வெளியில் கேட்ட ஒலியை
இசைத்த பறவையின் பெயரை
அவனுக்குச் சொல்ல
அங்கிருந்த யாராலும் இயலாமல் போனதனால்
பறவையின் பாடலை
செல்பேசியில் பதிந்துகொண்டு
காத்துக் கொண்டிருக்கிறான்.
செல்பேசிக்கால
நாகரிகம் தெரியாத தாத்தாவை
ஊர் சென்று சந்திக்க.
அதுவரைக்கும்
தன் பெயரைச் சொல்லாமலேயே
கத்திக்கொண்டிருக்கிறது அப்பறவை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக