
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வந்தவாஜிலி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கப்பா. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈரம்மா என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று காலை அங்குள்ள மண்டபத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் குவிந்தனர். மணமேடைக்கு மணமக்கள் வந்ததும் உறவினர்கள் வாழ்த்து கோஷம் போட்டனர். சிலர் பூக்களை அள்ளி தூவினர்.
தாலி கட்டுவதற்கு முன்பு அவர்களது குல வழக்கப்படி நீளமான கூர்மையான கத்தியில் எலுமிச்சை பழத்தை குத்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மணமகன் லிங்கப்பா எலுமிச்சை பழத்தை கத்தியில் பொருத்திய சமயத்தில், “தவில்” இசை கலைஞர் சிவகுமார் உள்ளிட்ட இசை கலைஞர்கள் மேளம் அடித்தனர்.
பின்னர் சிவக்குமார் மண மேடைக்கு சென்று, மணமகன் லிங்கப்பாவிடம் தட்சணை தரும்படி கேட்டார். அப்போது அவரிடம் பணம் இல்லாததால் கண்டும் காணாதது போல் இருந்தார். அதன் பிறகும் சிவக்குமார் எங்களுக்கு தர வேண்டிய தட்சணையை கொடுங்கள். தட்சணை தந்தால்தான் தாலி கட்டும்போது, கெட்டி மேளம் வாசிப்போம் என்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த லிங்கப்பா மணமேடையில் இருந்த கத்தியை எடுத்து சிவகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதைப்பார்த்ததும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் சிவகுமாரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து லிங்கப்பாவை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் தாலி கட்டி விட்டு வருகிறேன் என்றார்.
ஆனால் மணப்பெண் ஈரம்மா, கொலைக்காரனை திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்து விட்டார். இதையடுத்து போலீசார் லிங்கப்பாவை கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக