தலைவா - நீங்க யானை இல்லை குதிரை.

தலைவா............
தங்களுக்கு எதுவும் நேராது என்பது புத்திக்கு தெரிந்தாலும் கடந்த ஒரு வாரமாக மனதில் ஒருவித பாரம் இல்லாமல் இல்லை. வேறு வேலைகளில் மூழ்கியிருந்தாலும் திடீரென தங்கள் ஞாபகம் வரும்போது மனதில் ஒரு கனம் ஏற்பட்டதை விபரிக்க முடியாது. தங்களுக்கு என்னதான் நோய் என்பதை தெரியாதவரை இருந்த கலக்கம் இப்போது இதுதான் பிரச்சனை என்று தெரிந்ததும்; அதிலும் குறிப்பாக மருத்துவத்தால் குணமாக்க கூடிய நோய்தான் என்று அறிந்ததும் இப்போது மனம் ஓரளவு அமைதி அடைந்துள்ளது.
எதுக்கு தலைவா தங்களுக்கு எடை குறைப்பு முயற்சி? தங்கள் தொழில் பக்திக்கு ஒரு ராயல் சலூட்; ஆனாலும் இப்படி உங்களை வருத்தி எங்களுக்கு படம் பண்ண வேண்டாமே!!!!!!!! நீங்க எங்க முன்னாடி திரையில வந்தாலே போதும்; எங்களுக்கு பாட்ஷா, அண்ணாமலை, சந்திரமுகி தந்தாலே போதும்; உங்களை வருத்தி இன்னுமொரு சிவாஜி, எந்திரன் வேண்டாம். தாங்கள் இதுவரை கொடுத்த 150 படங்களும் இந்த ஆயுளுக்கு எங்களுக்கு போதும், உங்க ஆயுள்தான் இப்ப எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதுக்காக உங்களை படம் பண்ண வேண்டாம் என்று அர்த்தமில்லை, பூரண ஓய்வுக்கப்புறம் 'ராணா'வைகுடுங்க; ஆனா தயவு செய்து இன்னுமொருதடவை உங்களை வருத்திக்காதிங்க.

தாங்கள் "யானை இல்லை குதிரை" என்பது எங்களுக்கு தெரியாததல்ல, ஆனால் இங்கே சிலருக்கு தெரியவில்லை; அதனால்த்தான் ஒரு சிலர் அபாண்டங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள், இன்னும் சிலர் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள், ஒரு சிலர் 'ராணா' 'காணா'வாகிவிட்டதாக அகமகிழ்கிறார்கள். 30 வருடமாக தங்களை தோற்கடிக்க நினைத்து தோல்வியடைந்த 'பாசமிகு நெஞ்சங்களின்' ஏக்கம்தான் இந்த வெளிப்பாடு என்பது தங்களுக்கும்/எங்களுக்கும் தெரியாததல்ல. அதேபோல இந்த அபாண்டங்களும், நீலிக் கண்ணீர்களும், மகிழ்ச்சியும் 'நீர்க்குமிழி' என்பதை அந்த ' சிலர்' அறியாதவர்கள் என்பதை தாங்களும்/நாங்களும் அறியாதவர்கள் அல்ல.
படித்த மேதை ஒருவர் சமூகத்தளம் ஒன்றில் "அவரும் சாதாரணமான மனிதர்தானே எதற்காக அவருக்கு இவளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எதற்காக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு ஒன்று என்பதுபோல ரியாக்ட் செய்ய வேண்டும்" என்று கேட்கிறார். பத்துநாள் வளர்த்த பூனை குட்டியை காணவில்லை என்றாலே மனது பதைபதைக்கிறதே 25 வருடமாக தங்களோடு எமக்கிருக்கும் பந்தம் இந்த மேதைகளுக்கு புரியவா போகிறது? நாங்கள் தங்களை எங்கள் குடும்பத்தில் ஒருவனாக்கி 25 வருடங்கள் கடந்துவிட்டது என்பதை இவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

இன்பங்கள் மட்டுமே வாழ்க்கையின்னா வாழ்க்கை போராடிச்சு போயிடும், அப்பப்ப துன்பங்களும் வரணும், சோதனையை சந்திச்சாத்தாய்யா சாதனை வரும்; இது தாங்கள் சொல்லியதுதான், இதை நாங்கள் மறக்கவில்லை; 'ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்' என்பதையும் நாங்கள் மறக்கவில்லை. கல்லடி பட்டாலும் கண்ணடி(திருஷ்டி) படக்கூடாது என்பார்கள்; தங்களுக்கு பட்ட கண்ணடி(திருஷ்டி) கொஞ்சநெஞ்சமா என்ன? தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திசையிலும் இருந்தும் வந்த திருஷ்டி இப்போது கழிந்ததாகவே எடுத்துக்கொள்வோம்.
தற்போது தங்களுக்கு தேவை ஓய்வு, எங்களுக்கு (ரசிகர்களுக்கு) தேவை நம்பிக்கை, சரியான நேரம் வரும்போது 'ராணா' வரும், தமிழர்களுக்கு நல்ல காலம் வருமானால் ராட்ஜியமும் வரும் என்கின்ற நம்பிக்கையில்; ஒரு வாரமாக தவித்த மனநிலையில் இருந்து இப்போதுதெளிந்த மனநிலையில், நம்பிக்கையுடன் தங்களுக்காகவும் 'ராணா'விற்காகவும் காத்திருக்கும்..........
சராசரி ரசிகன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக