
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம், ராணா. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
படப்பிடிப்பு தொடக்க விழா, சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த மாதம் 29ந் தேதி நடந்தது. அதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். படப்பிடிப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அன்று பிற்பகல் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9ந் தேதி வரை அவர் அங்கு சிகிச்சை பெற்றார்.
கடந்த 13ந் தேதி மாலை அவர் சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவு காரணமாக, ‘ராணா’ படம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வதந்திகள் பரவின. அந்த வதந்திகளை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மறுத்தார். ரஜினிகாந்த் குணம் அடைந்து வீடு திரும்பியபின், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டபின், ராணா படப்பிடிப்பு தொடரும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டியில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ராணா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தொடக்க விழா அன்றுதான் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.
எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு எங்கிருந்து இவ்வளவு சக்தி கிடைக்கிறது? என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அன்று அவர் உடல்நலக்குறைவாக இருந்தார்.
ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன்,” என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக