ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் துணிச்சலான பத்திரிகை போட்டோ கிராபர் கதை...
தின அஞ்சல் பத்திரிகை போட்டோ கிராபர் ஜீவா. அவருடன் பணியாற்றும் நிருபர்கள் கார்த்திகா, பியா. முகமூடி தீவிரவாதிகள் பாங்கியில் கொள்ளையிடுகின்றனர். அவர்களை படம் பிடித்து போலீசில் சிக்கவைக்கிறார் ஜீவா. சிறுமியை கோட்டா சீனிவாசராவ் பால்ய விவகாரம் செய்வதாக கார்த்திகா செய்தி வெளியிடுகிறார். கோட்டா பத்திரிகை அலுவலகத்துக்கே வந்து மிரட்டுகிறார்.
கார்த்திகா வசம் இருந்த டேப் ஆதாரம் மாயமாவதால் மறுப்பு செய்தி வெளியிட நிர்வாகம் தயாராகிறது. அன்று இரவு காட்டு கோவிலில் ரகசியமாக நடக்கும் அந்த திருமணத்தை ஜீவா உயிரை பணயம் வைத்து படம் எடுக்கிறார். மறுநாள் அப்படங்கள் பத்திரிகையில் வெளியாகி கோட்டா கைதாகிறார்.
ஊழல் ஆட்சியை அகற்றி மாற்றம் கொண்டு வர அஜ்மல் தலைமையில் இளைஞர்கள் திரள்கின்றனர். சிறகுகள் என்ற அமைப்பை துவக்கி தேர்தலிலும் குதிக்கிறார்கள். ஆளும் வர்க்கத்தால் அவர்கள் அடித்து ஒடுக்கப்படுகின்றனர். சிறகுகள் அமைப்பினர் நடத்தும் கூட்டத்தில் குண்டு வெடித்து பலர் சாகின்றனர். இவை பற்றிய படங்களை எடுத்து ஜீவா பத்திரிகையில் பிரசுரிக்கிறார்.
இதனால் சிறகுகள் இயக்கத்துக்கு ஆதரவு பெருகுகிறது. அஜ்மல் ஆட்சியை பிடிக்கிறார். அதன் பிறகு நடப்பவை எதிர்பாராத அதிர்ச்சி திருப்பங்கள்...
ஜீவாவுக்கு மைல்கல் படம். வழக்கமான அழுக்க முகத்தில் இருந்து மாறி துடிப்பான போட்டோ கிராபராக அம்சமாக ஜொலிக்கிறார். பாங்கி கொள்ளையர்களை பைக்கில் துரத்தி படம் எடுக்கும் ஆரம்பமே அமர்க்களம். பத்திரிகை அலுவலகத்தில் அடியாட்களுடன் புகுந்து மிரட்டும் கோட்டா சீனிவாசராவை நைசாக பேசி அனுப்பிவைப்பது... சிறுமியை கோட்டா திருமணம் செய்வதை படம் எடுத்து லேப்டாப் மூலம் பத்திரிகை அலுவலகத்துக்கு அவசரமாக அனுப்பி பரபரப்பு செய்திகளாக்குவது கைதட்டல்.
கிளைமாக்சில் நிமிர வைக்கிறார். பத்திரிகை நிருபராக வரும் கார்த்திகா பளிச்சிடுகிறார். ஜீவாவை திருடன் என நினைத்து மடக்கி பிடிப்பது. தவறை உணர்ந்து காதல் பார்வை வீசுவது... இக்கட்டான சூழலில் ஜீவாவால் மீண்டு கண்ணீரால் நன்றி சொல்வது என அழுத்தமான உணர்வுகளை வெளியிட்டு பழைய நடிகை ராதா மகள் என்பதை நிரூபிக்கிறார்.
பியா துறுதுறுவென இளமை வீசுகிறார். குண்டு வெடிப்பில் சிக்கும் போது மனதை பிழிகிறார். பிரகாஷ்ராஜ் சிறிது நேரம் வந்தாலும் மிரட்டல். கோட்டா சீனிவாசராவ் வித்தியாசமான வில்லத்தனத்தில் ஸ்கோர் பண்ணுகிறார். சிறகுகள் இளைஞர் அமைப்புடன் வீதிவீதியாக ஆதரவு திரட்டி அடிபடும் அஜ்மல் மனதை தொடுகிறார்.கிளைமாக்ஸ் எதிர்பாராதது.
பத்திரிகை அலுவலகமும் அங்குள்ள எடிட்டிர், இணை எடிட்டர் போன்ற கேரக்டர்களும் அற்புத பதிவுகள். நேர்த்தியான காட்சி அமைப்புகள், வலுவான கதை யோட்டத்துடன் படத்தோடு ஒன்ற வைத்து சபாஷ் போட வைக்கிறார். இயக்குனர் கே.வி. ஆனந்த். கல்லுரி மாணவர்கள் திடும் என ஆட்சியை பிடிப்பதில் யதார்த்தம் இல்லை. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக