
அரசு பஸ்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய பொன்மொழி அழிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இடம் பெறும் அரசு விரைவு பஸ்கள் டவுன் பஸ்களிலும் ஏதாவது ஒரு திருக்குறள் எழுதப்பட்டு இருக்கும். பஸ்சின் உட் பகுதியில் டிரைவருக்கு பின்னாலே அல்லது இடது புறத்திலே எழுதப்பட்டு இருக்கும்.
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி எழுதிய பொன்மொழியும், அரசு பஸ்களில் எழுதப்பட்டு இருந்தது. சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் ஓடக் கூடிய அரசு பஸ்களில் நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, “நாம்” என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்ற வாசகம் இடம் பெற்றது. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்னாள் முதல்வரின் பொன் மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டன. அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கும் இது தொடர்பான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட் டது. திருக்குறளை தவிர வேறு யாரின் பழமொழிகள் எதுவும் இடம் பெறக்கூடாது என்று அதிரடியாக கூறப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகரத்தில் ஓடக் கூடிய அரசு பஸ்களில் அந்த வாசகங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பஸ்களில் அவை அழிக்கப்பட்டு விட்டன.
ஒரு சில பஸ்களில் இன்னும் அழிக்கப்படவில்லை. இதே போல முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு என்று இதுவரை நியமிக்கப்பட்ட பஸ்கள் தற்போது ஜெ.ஜெ.நகர் கிழக்கு, ஜெ.ஜெ. நகர் மேற்கு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது. கே.கே. நகர், என்று அழைக்கப்படும் கலைஞர் நகரும் பஸ்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கலைஞர் நகர் மாற்றப்பட்டு கே.கே.நகர் என்று பஸ்சின் பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் தி.மு.க., அ.தி.மு.க. அரசு மாறும் போதும் இந்த ஊர் பெயர்களும் மாற்றுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக