‘ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?’ என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப்.ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது.
இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான்.
கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா வென்றதும், புதுப்புது ரஜினி ஜோக்குகளை கிளப்பிவிட்டுள்ளது.
“சச்சின் டெண்டுல்கர் அம்மா பெயர் ரஜினி டெண்டுல்கர்’, ‘உலகக் கோப்பை இறுதிப் போட்டி ரஜினியைப் பார்த்தது’ என்ற இரு துணுக்குகள் வட இந்தியா முழுக்க இப்போது பிரபலம்.
போதாக்குறைக்கு, அமிதாப்பச்சன் தனக்கு வந்த ஒரு ரஜினி எஸ்எம்எஸ்ஸை தனது மைக்ரோபிளாகில் எழுதியிருந்தார்.
அதில் “கிரகாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்த போது, அவருக்கு ரஜினியிடமிருந்து இரு மிஸ்டு கால்கள் வந்திருப்பதைக் கண்டாராம்” என்றிருந்தது.
இதனை ‘பிரில்லியன்ட் கற்பனை’ எனக்குறிப்பிட்டு அமிதாப் எழுதியிருந்தார்.
ஆனால் ரஜினி ரசிகர்களால் இதனை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.
உடனடியாக அமிதாப்புக்கு தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்துள்ள அமிதாப், “ரஜினியை ஒருபோதும் நான் விமர்சிக்கவோ கிண்டலடிக்கவோ மாட்டேன். உண்மையில் இந்த துணுக்குகள் ரஜினி எந்த அளவு உயர்வானவர், அவரால் முடியாத விஷயமே இல்லை என்பதை உணர்த்துவதாகவே உள்ளன. மிகவும் உன்னதமான மனிதர், மிகச் சிறந்த மனிதாபிமானி, கடவுளுக்கு நிகரானவர், அன்பு மிக்கவர்”, என்று குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக