
வேலைக்குப்போகும் வழக்கமான
காலை நேரப் பேருந்துப் பயணத்தில்
சட்டென்று அவள் கண்களையும்
மனதையும்
சன்னல்வழி கண்ட சிறுபறவை
தூண்டிலிட்டு இழுத்துக்கொண்டது
அவளுக்கே புதிதாயிருந்தது
பறவைகளை கவனிக்கும்
வெகுசில மனிதர்களில் புதிதாய் ஒருத்தி
தன்னை கவனிப்பது
அந்தப் பறவைக்கும் தெரியாது
‘மனிதர்களை கவனிக்கும் பறவை
பறவைகளில் இருக்குமா?’
‘இரண்டு விரலளவு கருங்குருவி’
என்றொரு வாசகத்தை எண்ணத் தூரிகை
மனத்திரையில் தீட்டத்துவங்கியது
மரத்திலிருந்து பறந்து
கணங்களில் மீண்டு(ம்)
மரத்திற்கே சென்றமர்ந்
ததன் சிறகடிப்பு பறந்ததுபோலவே இல்லை
அவளுடைய செல்ல மழலை
படுக்கை மெத்தையில் எழுந்து
துள்ளித் துள்ளிக் குதித்து விளையாடிவிட்டு
மீண்டும் படுத்துக்கொள்வதைப்போலிருந்தது
வாசல் தாண்டி மழைக்குள் சென்று
மீண்டும் வாசலுக்கு வந்து
சிரித்து விளையாடுவதைப்போலிருந்தது
ஒரு கன்றுக்குட்டி
பசும்புல் வெளியில் துள்ளாட்டம்போட்டுவிட்டு
தாய்மடிக்கே திரும்பியது போலிருந்தது
தன்னை கிளர்ச்சியுறச் செய்ய
ஒரு எளிய பறவைக்கு இயன்றதை எண்ணி
அவளுக்கே ஆச்சரியமாயிருந்தது
அன்று அவள் மீள்வாசித்த
சமயவேலின் புரியாத ஒரு கவிதையும்
அதன் மகத்துவமும்
புரிந்தும் பிடித்தும் போனது
அந்த இரண்டு விரலளவு குருவி
தனக்களிக்கத்த கொடையென்று எண்ணினாள்
மாலையில் வீடு திரும்பும்போது
இருக்காது என்று தெரிந்தும்
கருங்குருவி இருந்த இடத்தை
சும்மா ...பார்த்துக்கொண்டே சென்றாள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக