தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்த மஹதீரா வசூல் சாதனை படைத்தது. இது வரை எந்தப் தெலுங்கு படமும் செய்யாத வசூலை மஹதீரா பெற்றதாக தகவல்கள்.
அதை அப்படியே மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து தமிழில் வெளியிடுகிறார்கள். ராம் சரண் தேஜாவிற்கு தமிழில் ஒரு பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைக்கும் என்பது அவர்களின் நோக்கம். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறது.
ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்துக்கு மரகத மணி இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதியவர் வாலி. நடிகர் கமலஹாசன் இசைத் தகடை வெளியிட இயக்குனர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.
விழாவில் வாழ்த்திப் பேசிய கமல், நானும் சிரஞ்சீவியும் ஆரம்பகால நடிகர்களாக இருக்கும் போது எங்களை ஏற்றிவிட இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்கி உள்ளோம். சிரஞ்சீவி மகன் உள்ளிட்ட இளம் நடிகர்களின் நடிப்பாற்றல் பொறாமை அளிப்பதாக உள்ளது. ராம்சரண் தேஜா கஷ்டப்பட்டு நடித்து இருப்பது தெரிகிறது.
“மாவீரன்” தமிழ் படத்தை அப்படியே ஆந்திராவிலும் ரிலீஸ் செய்ய வேண்டும். எனது பல தமிழ் படங்கள் அங்கு நேரடியாக வெளியாகி பல நாட்கள் ஓடியுள்ளன. தமிழை ரொம்ப போற்றுகிறவர்கள் தெலுங்கர்கள். இங்கு வசிக்கும் தெலுங்கர்கள் கூட தமிழை தாய்மொழி போல் ஏற்றுள்ளனர்.
தமிழ்,தெலுங்குதிரையுலகினர் இணைந்து செயல்படவேண்டும். வெளிநாட்டுக்காரர்கள் பலர் இந்தியப் படம் மும்பையில் தயாராகிறது என்று நினைக்கின்றனர். தமிழில், மலையாளத்தில், தெலுங்கில் என பல மொழிகளில் இந்தியப் படங்கள் வருகின்றன. அதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த நமது இருபட உலகமும் கைகோர்க்க வேண்டும். இதன் மூலம் உலக வர்த்தகத்தை எட்டிப்பிடிக்கலாம் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக